மசூர் பருப்பின் மகத்துவம்

நன்றி குங்குமம் டாக்டர்

மசூர் பருப்பு புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஒரு சத்தான உணவாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது தோல் பொலிவிற்கும் சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

மசூர் பருப்பின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் எடை இழப்பு மற்ற பருப்பு வகைகளை விட இதில் கார்போஹைட்ரேட் குறைவு மற்றும் புரதம் அதிகம் ஒரு கப் மசூர் பருப்பில் சுமார் 17 கிராம் புரதம் உள்ளதால் இது உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு

மசூர் பருப்பில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் (anti oxidants) நிறைந்துள்ளதால், இது ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

செரிமானம் மற்றும் ஆற்றல்

நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் உடலுக்குத் தேவையானஆற்றலை வழங்குகின்றன.

சருமப் பொலிவு

முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தோல் சுருக்கங்களைப் போக்கி, சருமத்தைப் பொலிவாக்க மசூர் பருப்பை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்து நன்மைகள்

ஒரு கப் மசூர் பருப்பில் 230 கலோரிகள், 15 கிராம் நார்ச்சத்து மற்றும் 17 கிராம் புரதம் உள்ளன. 44.5 கிராம் கார்போவஹைட்ரேட் மற்றும் 6 மி.கி. இரும்புசத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. சிவப்புப் பயறு என்றும் அழைக்கப்படும் மசூர் பருப்பு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துகளால் நிரம்பியுள்ளது. இதை தினசரி உணவில் எடுத்துக் கொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். இது இந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளில் ஒன்று. ஒரு கப் மசூர் பருப்பு ஊட்டச்சத்து மற்றும் உணவின் முழு தேவையை பூர்த்தி செய்கிறது.மசூர் பருப்பில் இரும்பு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6, பி2, ஃபோலிக் அமிலம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது.

மசூர் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோலில் உள்ள திசுக்களின் சேதத்தை எதிர்த்து போராடுவதுடன், வயதான தோற்றத்தில் இருந்து நம்மை காக்கிறது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது. இது மற்ற பருப்புகளை விட விலையில் மிகவும் குறைந்தது. சமைப்பதற்கு எளிமையாக இருக்கும் பருப்பு இது. இதில் பலவிதமான உணவு வகைகளை சமைக்கலாம். உதாரணமாக, மசூர் தால் சூப், மசூர் தால் கிச்சடி, மசூர் தால் கபாப்ஸ், மசூர் தால் தோசை மற்றும் பல உணவுகளை சிவப்பு பருப்பை வைத்து, செய்யலாம்.

மசூர் பருப்பை சமைப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சுத்தம் செய்து ஊற வைப்பது நல்லது. அரிசியும் மசூர் பருப்பும் சேர்த்து கிச்சடி செய்தால் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு முழுமையான உணவாகும். மசூர் பருப்பை மிதமான அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

பரிந்துரைக்கப்படும் அளவு

பெரியவர்கள் 30-50 கிராம்
குழந்தைகள் 20-30 கிராம்.

சமீபத்திய ஆராய்ச்சி

பருப்புகளில் உள்ள நார்ச்சத்து குடல் நுண்ணுஉயிர் சமநிலையை மேம்படுத்துகிறது.தாவரப் புரதம் இதயநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. குறைந்த க்ளைசமிக் இன்டக்ஸ் 55 குறைவாக gI மதிப்பு உணவாக கருதப்படுகிறது.

மசூர் பருப்பு ஆரோக்கியமானது என்றாலும், அதை அதிகமாக உட்கொள்வது வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறுகள், சிறுநீரகக் கற்கள் மற்றும் மூட்டுவலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான நபர்கள் மசூர் பருப்பை சரியான அளவில் சமைத்து சாப்பிட்டால் நன்மைகள் அதிகம். ஆனால் அதிகமாக சாப்பிடுவது எப்போதும் நல்லதல்ல. அதனால், குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா

Related Stories: