சப்பாத்திக்கள்ளி பழத்தை ‘நாகதாளி பழம்’ என்று சொல்வர்ள். முந்தைய காலத்தில் வேலிக்காக இந்த சப்பாத்திக்கள்ளியை நட்டு வளர்த்திருப்பர். இதற்கு தண்ணீர் தேவையில்லை. வறண்ட நிலங்களில் ஆடு, மாடு மேய்க்கும்போது நா வறட்சிக்கும், வெயிலில் ஏற்படும் உடற்சோர்வை போக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும் இந்த பழம் உதவி புரியும். ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்திக்கள்ளியின் மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க, சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும். கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும். இந்த தண்ணீரை குடிக்கும்போது உடலானது பெரும் ஆற்றலை பெறுகிறது.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, கருமுட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாக காத்து இருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். குங்குமப்பூவை விட இந்த நாகதாளி பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து விடுமாம். இதை சாப்பிடும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிவப்பாக இருக்குமாம். இந்த பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களும் விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிட்டு வரும்போது, மற்ற எந்தவித இனிப்பான பொருட்களும் சாப்பிட கூடாது. டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த பழம் கக்குவான் நோய், புற்றுநோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்தது. இது ஞாபக மறதிக்கு அருமருந்து, கண் பார்வை கூர்மையாகிறது. எகிப்தில் இதை ‘டின் ஷூகி’ என்று அழைக்கின்றனர். அதேசமயம் கிழக்கு அரபு நாடுகளில் ‘சபார்’ அல்லது ‘சபர்’ என்று அழைக்கின்றனர். சப்பாத்திக்கள்ளி பழங்கள் பல்வேறு நாடுகளில், பச்சை, மஞ்சள், சிவப்பு, ஊதா என பல நிறங்களில் உள்ளன. இந்த பழங்களின் சுவை அல்லது ருசியும் வேறுபடுகிறது. மஞ்சள் நிற சப்பாத்திக்கள்ளி பழம், சிவப்பு நிற பழங்களை விட அதிக சுவையாக இருப்பதாக எகிப்தில் பழத்தை விற்கும் சய்யத் அபூ யாசின் சொல்கிறார்.
‘பெண் காட்டு சப்பாத்திக்கள்ளி பழம், ஆண் பழத்துடன் ஒப்பிடும்போது அதிக இனிப்பும், மென்மையும் கொண்டது. ஆண் பழங்களில் சில உயர்ந்த புடைப்புகள் மற்றும் மகரந்த தூள் எச்சங்கள் இருப்பதை கொண்டு ஆண் மற்றும் பெண் பழங்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது.
எளிதாக கிடைப்பதால், சப்பாத்திக்கள்ளி பழம் ‘ஏழைகளின் பழம்’ என அறியப்படுகிறது. அதன் முக்கியத்துவம் காரணமாக துனிஷியாவில் அது ‘பயிர்களின் அரசன்’ (‘சுல்தான் கலா’) என்று அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் உள்ள சப்பாத்திக்கள்ளி பழம் உண்மையிலேயே ஒரு தாவர பொக்கிஷம். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) வெளியிட்ட ஆய்வில், இந்த பழத்தில் பேரிக்காய், ஆப்பிள், தக்காளி மற்றும் வாழைப்பழத்தை விட இரு மடங்கு அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இதில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீட்டாலின்கள் அதிக அளவில் உள்ளதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சப்பாத்திக்கள்ளி பழத்தை அதிக அளவில் உணவில் சேர்த்தால், இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க முடியும். இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும், இந்த பழங்களை தொடர்ந்து உண்பதால், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் செயல்பாடு மேம்படுகிறது. இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனால் சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சப்பாத்திக்கள்ளி பழம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு மற்றும் ஸ்கர்வி (வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய்) உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. உணவியல் நிபுணர்கள் கூறும்போது, ‘சப்பாத்திக்கள்ளி பழம் செரிமான மண்டலம், இதயம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’. மேலும், இந்த பழம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்கின்றனர். இங்குதான் ‘குடல்-மூளை தொடர்பு’ (கட்-ப்ரெயின் ஆக்சிஸ்) என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது செரிமான மண்டலத்திற்கும் ஆரோக்கிய மனநிலைக்கும் உள்ள தொடர்பு.
குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. சப்பாத்திக்கள்ளி பழம் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பெக்டின், பழத்தில் உள்ள சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்கிறது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் இன்சுலின் வினை திறனை மேம்படுத்துகின்றன. இது அழற்சி, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கவும் உதவுகிறது. சப்பாத்திக்கள்ளி பழம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், ரத்த நாளங்களின் நெகிழ்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால், சப்பாத்திக்கள்ளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவு அதிகரிக்கிறது. உடலை அழற்சி மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. சப்பாத்திக்கள்ளி இலைகளின் சாறு தலைவலி, பல்வலி, வீக்கம், கருமையான காயங்களை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் இதை ‘முழுமையான ஆரோக்கியத்திற்கு உதவும் முழுமையான உணவு’ என்று அழைக்கின்றனர். சப்பாத்திக்கள்ளி பழமும், தாவரமும் பண்டைய காலங்களில் இருந்து குறிப்பாக மத்திய அமெரிக்காவிலும், மெக்ஸிகோவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரலாற்றின்படி, சப்பாத்திக்கள்ளி அஸ்டெக் மக்களின் கலாசாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அஸ்டெக் கலாசாரம் கி.பி. 14 முதல் 16ம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது.
அஸ்டெக் ராணுவ கொடியில் வாயில் பாம்புடன் சப்பாத்திக்கள்ளியின் மீது கழுகு அமர்ந்திருக்கும். அவர்களின் தலைநகரம் ‘டெனோச்சிட்லான்’ என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள் ‘கல்லில் வளர்ந்த சப்பாத்திக்கள்ளி’ ஆகும். மெக்சிகோவில் உள்ள அஸ்டெக் மக்கள் சப்பாத்திக்கள்ளி பழத்தை ‘டெனோஷ்ட்லி’ என்று அழைத்தனர். கி.பி. 1492 வரை ஐரோப்பியர்களுக்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை பற்றி தெரியாது. கரீபியன் கடலில் உள்ள ஹிஸ்பானியோலா தீவின் மீது (இப்போது ஹைட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு) ஸ்பானிஷ் மக்கள் படையெடுத்தபோது, அங்குள்ள உள்ளூர் மக்கள் இந்த பழத்தை அவர்களுக்கு அளித்தனர். அப்போது உள்ளூர் மக்கள் இந்த பழத்தை ‘ட்யூன்’ என்று அழைத்தனர் என்று எஃப்ஏஓ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஸ்பானிஷ் மக்கள் சப்பாத்திக்கள்ளியை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். பின்னர் 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் இது மத்திய தரைக்கடல் கரையிலும், வட ஆப்ரிக்காவிலும் பரவியது. 18ம் நூற்றாண்டில் சப்பாத்திக்கள்ளி தெற்கு ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனாவிற்கு பரவியது.
சப்பாத்திக்கள்ளியின் இடமாற்றம் வெற்றிகரமாக இருந்ததற்கு சில காரணங்கள் உள்ளன. நீண்ட பயணங்களிலும் சப்பாத்திக்கள்ளியின் புதிய வேர்களை உருவாக்கும் திறன் குறையவில்லை. மேலும் இது வெவ்வேறு வகையான மண்ணிலும், வெப்பநிலையிலும் (40 டிகிரி செல்சியஸுக்கு மேல்) தன்னை தகவமைத்து கொள்ளக்கூடிய அபரிமிதமான திறனை கொண்டுள்ளது. எனவே இது எளிதாக வெவ்வேறு இடங்களில் வளர முடியும். சப்பாத்திக்கள்ளிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. மேலும் இதற்கு ரசாயன உதவி தேவையில்லை.
ஆனால், அதிக உப்புத்தன்மை அல்லது நீரில் மூழ்கினால் இதற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். பண்டைய காலம் முதலே நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், காயங்களை குணப்படுத்தவும் சப்பாத்திக்கள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சோப்பு, ஷாம்பு மற்றும் லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சப்பாத்திக்கள்ளியை பயன்படுத்தி தாவர பசைகள் மற்றும் நிறமிகளும் தயாரிக்கப்படுகின்றன. மெக்ஸிகோ போன்ற சில சமூகங்களில், சப்பாத்திக்கள்ளியின் இலைகள் (பேடில்ஸ்) உண்ணப்படுகின்றன. இந்த இலைகளை வெட்டி, பொரித்து, மசாலா சேர்த்து அல்லது நெய்யில் பொரித்து அல்லது சீஸ் சேர்த்து உண்ணப்படுகிறது.
சப்பாத்திக்கள்ளி விலங்குகளுக்கான தீவன உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட், ஸ்டார்ச் மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளன. இவை விலங்குகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. இந்த தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை குறைக்க உதவுவதாக சப்பாத்திக்கள்ளி பயிரிடுதலை அதிகரிக்க ‘எஃப்ஏஓ’ ஆய்வு அறிவுறுத்துகிறது. பண்டைய காலங்களில் சப்பாத்திக்கள்ளி அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. ஸ்பானிஷ் உயர்குடி மக்கள் தங்கள் தோட்டங்களில் சப்பாத்திக்கள்ளி பயிரிட்டனர். இன்றும் சில தோட்டங்களில் இது காற்றை தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் உதவும் ஒருவகையான வேலியாக பயன்படுத்தப்படுகிறது. மொராக்கோவில் இன்றும் முட்செடியை ‘தாபியா’ என்று அழைக்கின்றனர். இது ஸ்பானிஷ் மொழியில் ‘வேலி’ என்ற வார்த்தையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சாப்பிடும் முறை
இந்த பழத்தின் மேற்பகுதியில் நிறைய முட்கள் இருக்கும். இது முள் பூ ஆகும். இந்த முள்ளை ஒரு கல்லில் வைத்து தேய்த்து முட்களை ஒரு துணியால் துடைத்து போக்கிவிட வேண்டும். இதன் பழுத்த பழத்தின் மேல் பகுதியை கை கொண்டு பிய்த்து எடுக்கும்போது அதனுள் முதலில் ஒரு தொண்டை முள் சற்று பெரிதாக இருக்கும். அதை எடுத்துவிட்டு உள்ளிருக்கும் சிவப்பு நிற சதைப்பகுதியை சாப்பிட வேண்டும். இதில் ஒரு தித்திப்பு, புளிப்பு கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இயற்கை கொடுத்த சப்பாத்தி கள்ளிப்பழம் கிடைக்கும்போது முறையாக முள்ளை நீக்கி சாப்பிட்டால் நிறைய நோய்களை குணப்படுத்தும். இந்தப் பழத்தைப் பற்றி அறியாமலேயே சாப்பிட்டவர்கள் நோய்நொடி இன்றி வாழ்ந்திருக்கின்றனர்.
குறைவாக சாப்பிடுங்கள்
பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சப்பாத்திக்கள்ளி பழத்தை மிதமாக உண்ண வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் குடல் பிரச்னைகள் (ஐபிஎஸ்) உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த பழத்தை சமநிலையான உணவின் ஒரு பகுதியாகவும், தேவைப்பட்டால் மருத்துவ மேற்பார்வையுடனும் உண்ணுவது மிகவும் பாதுகாப்பானது. உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 2 சப்பாத்திக்கள்ளி பழங்களை உண்ணலாம். அத்துடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
விலை என்ன?
இந்தியாவில் பொதுவாக மொத்த விற்பனையாக ஒரு கிலோ சப்பாத்திக்கள்ளி பழம் ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் தரம், விளைச்சல் மற்றும் நீங்கள் வாங்கும் இடத்தை பொறுத்து இந்த விலை மாறுபடும். பெரிய பண்ணைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் 5 கிலோ கொண்ட ஒரு பாக்கெட் ரூ.600 முதல் ரூ.1,200 வரை கிடைக்கும்.
இயற்கை அங்காடிகள் மற்றும் ஆன்-லைன் தளங்களில் மொத்தமாக வாங்கலாம்.ஆன்லைன் மற்றும் காய்கறி சந்தைகளில் அரை கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.
