கோவை: காங்கிரஸ் கட்சி புறவாயில் வழியாக அமைச்சரவைக்கு வந்து இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் எதிர்த்ததாக கூறிய சக்திகளோடு இணைந்து தவெக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி புறவாயில் வழியாக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகள் சூழ்ந்த கட்சியாக உள்ளது. மாற்றத்தை கொண்டு வருவோம் என கூறியவர்கள் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவது எவ்வாறு சாத்தியம் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த போது சனாதனம், வந்தே மாதரம் போன்ற விஷயங்களை அரசியலாக்கினர். இனி உணர்ச்சிப்பூர்வ அரசியலை தவிர்த்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு திரும்ப வேண்டும். தமிழக அரசியல் சூழலில் கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் ஒன்றிய அரசின் திட்டங்களை மறுப்பதற்கு பதிலாக, மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, கல்வித்துறையில் ஒன்றிய திட்டங்களை எதிர்க்காமல் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
