சென்னை: சென்னை பெருநகர காவல்துறை நடத்திய ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ (Special Drive Operation) அதிரடி சோதனையில், ஒரே இரவில் 100-க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு ஆபரேஷன் நடத்தப்பட்டது. சென்னையின் முக்கிய காவல் மண்டலங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, நேற்று ஒரே நாளில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தி நகரில் 18 ரவுடிகள், அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரவுடிகள், புளியந்தோப்பில் 20 ரவுடிகள், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 10 ரவுடிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சிறப்பு சோதனையின்போது சாதாரண குற்றவாளிகள் மட்டுமின்றி, சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்கள் குறிவைத்து தூக்கப்பட்டனர். நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ரவுடிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ரவுடிகளை போலீசார் ரகசிய இடங்களில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
