புதுடெல்லி: மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்காக தேசிய அளவில் நடத்தப்படுவது நீட் நுழைவுத் தேர்வு ஆகும். இதில் 2026 நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதி இருந்தனர். இருப்பினும் வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நீட் மறு தேர்வு வரும் ஜூன் 21ம் தேதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி சுதாகர் சிங் தரப்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘முறைகேடுகளை தடுக்கும் விதமாக நீட் தேர்வை கணினி மூலம் நடத்த வேண்டும். குறிப்பாக தற்போது நடைபெற இருக்கக்கூடிய இளநிலை நீட் மறுதேர்வை கணினி மூலம் முறையில் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தும் பட்சத்தில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். மேலும் தேசியத் தேர்வுகள் முகமையை கலைத்துவிட்டு, தேசிய தேர்வுகள் ஆணையம் என்று உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
