×

தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா மாநிலங்களில் இந்து கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க நாங்களே விசாரித்து உத்தரவு பிறப்பிப்போம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

 

 

புதுடெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் கோயில்களை மீட்டெடுத்து அந்தந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கக்கோரி கோவையை சேர்ந்த தயானந்த சரஸ்வதி, குஜராத்தை சேர்ந்த பரமானந்த சரஸ்வதி, அதேப்போல் மும்பையை சேர்ந்த விஸ்வேஷ்வரானந்த், சுப்ரமணிய சுவாமி ஆகிய தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்று கடந்த உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தயானந்த சரஸ்வதி என்பவர் தொடர்ந்த மறுஆய்வு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் உயர்நீதிமன்றங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று நாங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், மூன்று மாநிலங்களில் உள்ள சட்டங்கள் ஏறக்குறைய ஒரே விவகாரத்தை கையாளுவதால் வழக்கை உச்சநீதிமன்றமே தகுதியின் அடிப்படையில் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும்.

அதனால் இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Tamil Nadu ,Puducherry ,Andhra Pradesh ,Supreme Court ,New Delhi ,Dayananda Saraswathi ,Coimbatore ,Paramananda Saraswathi ,Gujarat ,Visveswaranand ,Mumbai ,Hindu Religious Endowments Department ,
× RELATED மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும்...