மும்பை: மும்பை – அகமதாபாத் இடையே அமையவுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் அதிகாரப்பூர்வ மாதிரி வடிவத்தை (Design) ஒன்றிய ரயில்வே அமைச்சகம் டெல்லியில் வெளியிட்டுள்ளது. விமானம் போன்ற இதன் நவீன தோற்றம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 508 கி.மீ நீளம் கொண்ட இந்த அதிவேக ரயில் பாதை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் மும்பை, சூரத், அகமதாபாத் உட்பட மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.
இத்திட்டத்திற்கான 1389.5 ஹெக்டேர் நிலமும் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டு, குஜராத்தில் 8 நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், கன்சோலி – ஷில்பாட்டா இடையே கடலுக்கடியில் 4.8 கி.மீ நீள சுரங்கப்பாதை மற்றும் 17 நதிப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் இந்த ரயிலின் பெட்டிகள், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சென்னையின் ஐசிஎஃப் மற்றும் பெங்களூருவின் பிஇஎம்எல் நிறுவனங்களால் தயாரிக்கப்படவுள்ளன. மணிக்கு 280 கி.மீ வேகத்தில் இயங்கவிருக்கும் இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம், விமானம் மற்றும் தற்போதைய பிரீமியம் ரயில்களின் கட்டணங்களுக்கு இணையாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிர்ணயிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
