×

நாடாளுமன்ற குழுவை இழிவுபடுத்தியதாக தர்மேந்திரபிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மாநிலங்களவையில் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல்

 

புதுடெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக மாநிலங்களவை விதி 187ன்கீழ் அதிகார வரம்பு மீறல் மற்றும் நாடாளுமன்ற அவமதிப்பு நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஜெய்ராம் ரமேஷ் சமர்ப்பித்துள்ளார். நாடாளுமன்றக் குழுவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக இந்த உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசியபோது, ​​நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அவர் அளித்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மே 15 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றக் குழுவிற்கு எதிராகச் சில இழிவுபடுத்தும் கருத்துகளைத் தெரிவித்தார். நாடாளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். அவர்கள் விஷயங்களை ஒரு குறிப்பிட்ட பாணியில் எழுதுகிறார்கள்; அது உங்களுக்கும் தெரியும். எனவே, நிலைக்குழு குறித்து நான் பேசப்போவதில்லை என்று தெரிவித்தார்.

ஒன்றிய கல்வி அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவை. இவை மிகவும் இழிவானவை. அமைச்சரின் இந்தக் கருத்துக்கள், நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்கள் மீது தவறான உள்நோக்கங்களைச் சுமத்துவதற்குச் சமமானவை. இது கடுமையான அவமதிப்பு ஆகும். நாடாளுமன்ற நிலைக்குழுவை அவமதிப்பது என்பது, நாடாளுமன்ற அவையையே அவமதிப்பதற்குச் சமமாகும். அந்தக் கருத்துகள் நாடாளுமன்றத்தின் மீதான அவரது அவமதிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களின் கண்ணியத்தைக் குறைத்ததற்காக, மாநிலங்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் விதி 187இன் கீழ், ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிராக நான் உரிமை மீறல் தீர்மான அறிவிப்பை அளித்துள்ளேன். அவர் மீதான நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Jairam Ramesh ,Dharmendra Pradhan ,New Delhi ,Union Education Minister ,Rajya Sabha ,C.P. Radhakrishnan ,
× RELATED மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும்...