- பெரிய விழா
- திருவனந்தபுரம்
- சதீசன்
- 13வது முதலமைச்சர்
- கேரளா
- ராகுல்
- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
- வி.டி.சதீசன்
- ராகுல் காந்தி
- காங்கிரஸ்
- ஐக்கிய…
திருவனந்தபுரம்: கேரளத்தில் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று பதவி ஏற்றது. 21 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த இடதுசாரி கூட்டணிக்கு இந்த முறை 35 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பாஜ முதன் முதலாக 3 தொகுதிகளை கைப்பற்றியது. இதற்கிடையே முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா, வி.டி. சதீசன் ஆகியோர் போட்டி போட்டனர்.
அதைத்தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வி.டி. சதீசனை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது . இது கே.சி. வேணுகோபாலுக்கும், ரமேஷ் சென்னித்தலாவுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கே.சி. வேணுகோபாலுக்கு காங்கிரசில் உயர் பதவி வழங்குவதாகவும், ரமேஷ் சென்னித்தலாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2 பேரும் சமாதானம் ஆனார்கள். இந்தநிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடந்தது. 13வது கேரளா முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்றார்.
அமைச்சர்களாக ரமேஷ் சென்னித்தலா, முரளீதரன், சன்னி ஜோசப், லிஜு, விஷ்ணுநாத், ஏ.பி. அனில்குமார், ரோஜி எம். ஜான், பிந்து கிருஷ்ணா, சித்திக், துளசி, ஓ.ஜே. ஜெனீஷ், குஞ்ஞாலிக்குட்டி, மோன்ஸ் ஜோசப், ஷிபு பேபி ஜான், கே.எம். ஷாஜி, என். சம்சுதீன், பி.கே. பஷீர், அனூப் ஜேக்கப், சி.பி. ஜான், வி.இ. அப்துல் கபூர் ஆகியோர் பதவி ஏற்றனர். இவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, எம்பி., தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். சதீசன் தலைமையிலான மந்திரிசபையில் காங்கிரஸ் சார்பில் 11 அமைச்சர்களும், முஸ்லிம் லீக் சார்பில் 5 அமைச்சர்களும் உள்ளனர். சபாநாயகர் பதவி முன்னாள் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜூன் 15 முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்: முதல்வரின் முதல் அறிவிப்பு
நேற்று கேரளத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற சிறிது நேரத்திலேயே வி.டி. சதீசன் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திரா கேரண்டி என்ற பெயரில் 5 திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தோம்.அதில் முதல்கட்டமாக 2 திட்டங்களை நிறைவேற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் கேரள அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்தியாவிலேயே முதன்முறையாக மூத்த குடிமக்களுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் ஜப்பானில் தான் முதன்முதலாக கொண்டுவரப்பட்டது. ஆஷா தொழிலாளர்களுக்கான ஊதியம் ரூ. 9 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப்படும். பள்ளிகளில் பணிபுரியும் சமையல் தொழிலாளர்கள், அங்கன்வாடி ஆசிரியைகள், ஆயாக்கள் ஆகியோருக்கான ஊதியம் ரூ. 1000 உயர்த்தப்படும். வரும் 21ம் தேதி சட்டசபை கூட்டத்தை கூட்ட கவர்னரிடம் சிபாரிசு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்பார்கள். மறுநாள் சபாநாயகர் தேர்வு நடைபெறும். 29ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.
முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
