புதுடெல்லி: வினாத்தாள் கசிந்தாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் பி.வி.குல்கர்னி மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரியல் விரிவுரையாளரான மனிஷா மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய தேர்வு முகமையின் தலைமையகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் அங்கேயே அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு செயல்முறையில் இவர் ஈடுபட்டு இருந்ததாகவும், என்டிஏவால் ஒரு நிபுணராக இவர் நியமிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. மந்தாரேவுக்கு தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாத்தாள்களை முழுமையாக அணுகும் அதிகாரம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 14ம் தேதி கைது செய்யப்பட்ட புனேவை சேர்ந்த மனிஷா வாக்மாரே என்பவரின் உதவியுடன் நீட் தேர்வெழுத இருந்த மாணவர்களை மந்தாரே ஒருங்கிணைத்ததாகவும் புனேயில் உள்ள தனது இல்லத்தில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புக்களை நடத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மந்தாரே வாய்மொழியாக கசிந்த வினாத்தாள் மற்றும் அதற்கான விடையை வாய்மொழியாக கூறியதாகவும் அதற்கு கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இவற்றில் பெரும்பாலானவை மே 3ம் தேதி நடந்த தேர்வில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
