- தலைமை நீதிபதி
- இந்தியா
- சூர்யகாந்த்
- புது தில்லி
- உச்ச நீதிமன்றம்
- இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்
- தலைமை நீதிபதி…
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி மனு அளித்த ஒரு வழக்கறிஞரை சாடிய தலைமை நீதிபதிசூர்ய காந்த், ஒட்டுண்ணிகள் மற்றும் கரப்பான்பூச்சிகள் போன்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். தலைமை நீதிபதி பயன்படுத்திய வார்த்தைகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரு அற்பமான வழக்கு விசாரணையின்போது நான் வாய்மொழியாக தெரிவித்த கருத்துக்களை ஊடகங்களின் ஒரு பிரிவினர் எவ்வாறு திரித்து வெளியிட்டுள்ளனர் என்பதை படித்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். எனது கருத்துக்கள் குறிப்பாக போலியான மற்றும் கள்ளச்சான்றிதழ்கள் வாயிலாக சட்டத்துறைக்குள் நுழைபவர்களை நோக்கியே அமைந்திருந்தன. அவை ஊடகங்களின் ஒரு பிரிவினரால் திரித்துக்கூறப்பட்டுவிட்டன.
நான் நமது நாட்டின் இளைஞர்களை விமர்சித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றதாகும். நமது நிகழ்கால மற்றும் எதிர்கால மனிதவளத்தை குறித்து நான் பெருமை கொள்வது மட்டுமல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரும் எனக்கு உத்வேகம் அளிக்கின்றனர். இந்திய இளைஞர்கள் என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர் என்று கூறுவது மிகைப்படுத்தல் ஆகாது. அதேபோல நானும் அவர்களை ஒரு வளர்ந்த இந்தியாவின் தூண்களாகவே கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
