புதுடெல்லி: இந்தியாவில் முதன் முறையாக ரூ.182 கோடி மதிப்புள்ள ஜிஹாதி போதை பொருள் எனப்படும் கேப்டகான் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 11ம் தேதி டெல்லியில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 31 கிலோ கேப்டகான் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த சிரியா நாட்டவரை பிடித்து விசாரித்த போது முந்த்ரா துறைமுகத்தில் சரக்கு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 196 கிலோ கேப்டகான் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிரியா நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேப்டகான் என்பது, மோதல் நடைபெறும் பிராந்தியங்களில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களுடன் அடிக்கடி தொடர்புடைய, அதிக போதை தரும் ஒரு செயற்கை ஆம்பெடமைன் வகை ஊக்கமருந்து. தீவிரவாத அமைப்புகள்,போர் திறனை அதிகரிக்கவும் போராளிகளிடையே உள்ள அச்சத்தை அடக்கவும் இதை பயன்படுத்துவதால், இது ஜிஹாதி போதை பொருள் என்னும் பெயர் பெற்றது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிடுகையில், இந்தியாவில் முதன்முறையாக ஜிஹாதி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கான இடைவழிப் பாதையாக இந்தியா பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் அரசின் உறுதியை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றன என்றார்.
