நாடு முழுவதும் போலி வக்கீல்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதித்துறையை தாக்கும் சமூக ஒட்டுண்ணிகள் கூட்டம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் ஆலோசனை

 

டெல்லி: போலி சட்டப் படிப்பு சான்றிதழ்களுடன் உலா வரும் நபர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மூத்த வக்கீல்கள் அந்தஸ்து வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று கூறி சஞ்சய் துபே என்ற வக்கீல் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் வக்கீல் சமூக வலைதளங்களில் பயன்படுத்திய மோசமான வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதேபோன்று இவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், தற்போது தொடரப்பட்ட மனுவையும் வக்கீல் சஞ்சய் துபே வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த விசாரணையின் போது, கருப்பு அங்கி அணிந்து கொண்டு ஆயிரக்கணக்கான போலி நபர்கள் சுற்றுவது குறித்து கவலை தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை பதிவிடும் டெல்லி வக்கீல்களின் சட்டப் படிப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து தமக்கு கடும் சந்தேகம் உள்ளதாகக் கூறினார்.

மேலும், வேலை கிடைக்காமல் சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் என்ற போர்வையில் நீதித்துறையை தாக்கும் சமூக ஒட்டுண்ணிகளுடன் வக்கீல்கள் கைகோர்க்கக் கூடாது என்று எச்சரித்த அவர், தகுந்த வழக்கு வரும்போது டெல்லி வக்கீல்களின் சான்றிதழ்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மூத்த வக்கீல் அந்தஸ்து என்பது வெறும் அந்தஸ்துக்கான அடையாளம் அல்ல என்றும், அது நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்பு என்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அப்போது குறிப்பிட்டார்.

Related Stories: