போர்வெல் குழியில் விழுந்த 4 வயது சிறுவன் 9 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு: பஞ்சாப் மீட்பு குழுவினருக்கு பாராட்டு

 

ஹோஷியார்பூர்: ஹோஷியார்பூரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 9 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் சக் சமனா கிராமத்தைச் சேர்ந்த குர்கரன் சிங் (4) என்ற சிறுவன், நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு புதிதாக தோண்டப்பட்டு, மண் நிரப்பப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். சுமார் 20 முதல் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிய தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 40 வீரர்களுக்கு மேல், ஜே.சி.பி உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் மீட்பு பணியில் உடனடியாக இறங்கினர். சிறுவன் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டதுடன், கேமரா மூலம் அவனது உடல்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு, பின்னர் குறுக்கு சுரங்கம் அமைக்கும் வியூகம் வகுக்கப்பட்டது. அந்த பகுதியில் மணல் சரிந்து கொண்டே இருந்ததால், மீட்பு பணியில் பெரும் சவால் ஏற்பட்ட போதிலும் வீரர்கள் சோர்வின்றி பணியாற்றினர்.

சுமார் 9 மணி நேர தீவிர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12.40 மணி அளவில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்பு குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை துணை கமாண்டன்ட் பங்கஜ் சர்மா கூறுகையில், ‘மண் சரிவு காரணமாக மீட்பு பணி கடினமாக இருந்தது, எனினும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சிறுவனை உயிருடன் மீட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: