வெளிநாட்டு பயணத்திற்கு புதிய வரி விதிப்பா?.. துளியும் உண்மையில்லை என பிரதமர் மோடி விளக்கம்

 

டெல்லி: வெளிநாட்டு பயணங்களுக்கு புதிய வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதாக பரவிய தகவலை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது.

முன்னதாக தெலங்கானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பதன் மூலமும் பெட்ரோல், டீசல் மற்றும் அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும். எல்லையில் உயிரை தியாகம் செய்வது மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில் பொறுப்புடன் செயல்படுவதும் தேசபக்தி தான்’ என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், வெளிநாட்டு பயணங்களுக்கு புதிய வரி, செஸ் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து ஒன்றிய அரசின் உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இதற்கு உடனடியாக எக்ஸ் தளத்தில் பதில் அளித்த பிரதமர் மோடி, ‘இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல். வெளிநாட்டு பயணங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் கேள்விக்கே இடமில்லை. மக்களின் எளிதான வாழ்க்கை மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த மறுப்புக்கு பின்னர், அந்த தனியார் ஊடகம் தனது தவறான செய்திக்கு மன்னிப்பு கோரி அத்தகவலை திரும்பப் பெற்றுள்ளது.

Related Stories: