பெங்களூரு: நடிகர் தர்ஷன் தொடர்பான வழக்கு விவகாரத்தை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ‘டிவி’ ஸ்டுடியோ வெளிச்சங்கள் உண்மையான நீதியை மறைக்கக் கூடாது என்றும், இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் நடந்த ரேணுகாசுவாமி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் ரகசிய குற்றப்பத்திரிகை விபரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதித்து ஏற்கனவே சிவில் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் அமலில் இருந்தன.
இருப்பினும், பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும், டிஜிட்டல் ஊடகங்களும் இந்த வழக்கின் விபரங்களை கசியவிட்டு, தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக இணையான ஊடக விசாரணையை நடத்தி வந்தன. தங்களுக்கு சாதகமாக பொதுமக்களின் எண்ணங்களை திசைதிருப்பி, நீதிமன்ற நடுநிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அனிமேஷன்கள் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை நாடகமாக ஒளிபரப்பினர்.
இதனை எதிர்த்து தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் சங்கர் மகதூர், செய்தி ஒளிபரப்பு விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது சட்டப்படி அவமதிப்பு செயலாகும் என்று சாடிய நீதிபதி, ‘கருத்து சுதந்திரம் என்பது போற்றத்தக்க ஒன்று; ஆனால் அது ஊடக விசாரணையாக மாறும்போது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகி விடுகிறது. ஊடகங்கள் ஒரு கண்காணிப்பாளர் மட்டுமே, அவர்களே நீதிபதியாக மாறக்கூடாது.
ஸ்டுடியோ வெளிச்சங்கள் உண்மையான நீதியை மறைக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார். தர்ஷனின் புகாரில் உள்ள லிங்குகளை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஆய்வு செய்து, கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின்கீழ் விதிகளை மீறிய சேனல்களின் உரிமங்களை ரத்து செய்யவும், உள்ளடக்கங்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார். இப்புகார் மீது 6 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவும், 12 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
