வாரத்தில் இரண்டு நாட்கள் காணொலி காட்சி மூலமே விசாரணை உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: மேற்காசிய நாடுகள் மோதல் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் வாரத்தில் 2 நாட்கள் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தின் விசாரணை மற்றும் இதர பணிகள் காணொலி காட்சி மூலம் நடைபெறும் எனவும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் காணொலி காட்சி மூலம் மற்றும் நேரடியாக என ஹைபிரிட் முறையில் நடைபெறும் என சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நீதிமன்ற பணியாளர்களில் 50% பேர் தேவைக்கு ஏற்ப வீட்டிலிருந்து தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவுறுத்தியுள்ளதோடு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒன்றாக கார்களில் பயணிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இத்தகைய நடைமுறைகள் உச்சநீதிமன்றத்தில் அமலில் இருக்கும் எனவும் உச்சநீதிமன்ற பதிவாளர் அவரது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: