இந்தூர்: மபியில் சர்ச்சைக்குரிய போஜசாலா-மவுலா மசூதி வளாகம், சரஸ்வதி கோயில் என மபியின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மபி மாநிலம், தார் மாவட்டத்தில் போஜ்சாலா-கமால் மவுலா மசூதி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். ஆனால் போஜசாலா என்பது ஒரு கோயில் என்றும் எங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2003ல் இது தொடர்பாக கடும் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து,செவ்வாய்கிழமையன்று இந்துக்களும், வெள்ளிக்கிழயைன்று முஸ்லிம்களும் அங்கு தொழுகை நடத்துவதற்கு அனுமதி தரப்பட்டது. அந்த இடத்தை மசூதி என முஸ்லிம்கள் வலியுறுத்தினர். ஜெயின் சமூகத்தினர் போஜசாலா ஒரு ஜெயின் கோயில் ஆகும் என்று கூறினர். தார் போஜசாலா கமால் மவுலா மசூதி குறித்து மூன்று தரப்பினரும் உரிமை கோரியதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போஜசாலாவில் தங்களுக்கு மட்டும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மபி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா, அலோக் அவஸ்தி ஆகியோர், போஜசாலா- கமால் மவுலா மசூதியை, இந்துக்கள் வழிபடும் சரஸ்வதி தேவியின் கோயில் என நேற்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், ராஜா போஜுடன் தொடர்புடைய சமஸ்கிருத கற்றல் மையமாக இந்த இடம் விளங்கியுள்ளது என்பது வரலாற்றில் இருந்து தெரியவருகிறது. தார் மாவட்டத்தில் சரஸ்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் இருந்ததை ஆய்வுகள் குறிக்கிறது.இஸ்லாமியர்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், இரு தரப்பினரிடையே முழுமையான நீதியை உறுதி செய்வதற்காகவும், தார் மாவட்டத்தில் மசூதி அமைப்பதற்கு வேறு நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
