* யாருக்கு வாக்களித்தனர் என குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு
சென்னை: தேர்தல் ஆணைய விதிகளுக்கு மாறாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பெண் உள்பட 17 வெளிநாடு வாழ் இந்தியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தேர்தலில் வாக்களித்ததற்கான கைவிரல் மையால் சிக்கிய நிலையில், யாருக்கு வாக்களித்தனர் என குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கி இருப்பதோடு, அந்த நாட்டு பிரஜையாகவும் மாறி குடியுரிமை பெற்று விடுகின்றனர். அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு விடும். அப்படிப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வழக்கம் போல் வந்து சென்று கொண்டு இருக்கலாம். ஆனால் இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தல்களிலும் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில் இந்த ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், விமானங்களில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து மொத்தமாக வரத் தொடங்கினர். ஒவ்வொரு சட்டசபை, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களின் போதும், இதேபோல் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வாக்களிக்க தமிழ்நாட்டுக்கு, வருவது வழக்கம்தான். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான தமிழர்கள் வாக்களிக்க வந்தனர். இது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை அதிகாரிகளுக்கு ரகசிய, அறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதன்படி ஏப்ரல் 23ம் தேதிக்கு மேல், வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் கை விரல்களை கண்காணிக்கும் படியும், அவர்கள் வாக்களித்த அடையாள மை இருந்தால், அவர்கள் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம். அவர்களின் விமான பயணங்களை ரத்து செய்து, காவல் நிலையங்களில் ஒப்படைக்கும் படியும், விசாரணை நடத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கடந்த 23ம் தேதி முதல், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வந்த பயணிகளை, குறிப்பாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய பிரஜைகளின் கை விரல்களை ஆய்வு செய்தனர்.
அவ்வாறு குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், இதுவரையில், சென்னை விமான நிலையத்தில் ஒரு பெண் உள்பட 15 வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தது தெரிய வந்தது. அவர்கள் சென்னை மாநகர், சென்னை புறநகர் பகுதி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்து உள்ளனர். அதேபோல், மதுரை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில், மதுரை மாநகரில் விதிமுறைகளுக்கு மாறாக, தேர்தலில் வாக்களித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 2 வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்ற பயணிகளை, குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவர்களின் பயணங்களை ரத்து செய்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், சென்னை, மதுரை ஆகிய விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற, ஒரு பெண் உள்பட 17 பேரை, குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவர்களின் பயணங்களை ரத்து செய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் அந்தந்த நாடுகளில் குடியுரிமைகள் பெற்றவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. வாக்காளர்கள் பட்டியலில் இவர்கள் பெயர்கள் இருந்ததா இல்லையேல் வேறு பெயர்களில் இவர்கள் வாக்களித்தார்களா என்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நான்கு பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 17 பேர் பிடிபட்ட தகவலை, குடியுரிமை அதிகாரிகள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தேர்தல் ஆணையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
