ஆர்.எஸ்.மங்கலம், மே 14: ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் ஒருங்கிணைந்த திருவாடானை பகுதியின் முக்கிய பகுதியான ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் முக்கிய விவசாயமாக நெல் மற்றும் மிளகாய் விவசாயம் நடைபெறும்.
நெல் அறுவடைக்கு பின்பு, கோடைகால சாகுபடியாக விவசாயிகள் அப்பகுதியில் பருத்தி, உழுந்து, எள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயிரிட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு கோடை சாகுபடியாக ஒரு சில கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை செடிகள் தற்போது பசுமையாக காட்சியளித்து வருவதுடன் மகசூல் நிலையை எட்டு நிலையில் உள்ளது.
விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலையின் மகசூலை அதிகரிக்கும் விதமாக, சாகுபடி வயல்களில் ஜிப்சம் மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்துவதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள வயல்களில் செடிகள் பசுமையாக வளர்ந்து காணப்படுகிறது. இதனை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
