இந்தோனேசியா: இந்தோனேசியா வானில் தோன்றிய அரிய ரெயின்போ மேகம் (Rainbow clouds) எனப்படும் நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தோனேசியாவின் ஜோங்கோல் (Jonggol), போகோர் (Bogor), உள்ளிட்ட பகுதியில் வானத்தில் பல வண்ணங்களில் மின்னும் மேகங்கள் தோன்றிய காட்சிகள் பொதுமக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிங்க், பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் மின்னிய அந்த மேகங்களை பார்த்த பலர் இது உண்மையா? அல்லது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இது இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் விஞ்ஞானிகள் இதை ரெயின்போ கிளவுட் எனப்படும் அரிய இயற்கை நிகழ்வு என்று விளக்கம் அளித்துள்ளனர்.
மெல்லிய மேகங்களுக்குள் இருக்கும் மிகச் சிறிய நீர்த்துளிகள் அல்லது பனிக்கட்டிகள் மீது சூரிய ஒளி படும்போது அந்த ஒளி பல நிறங்களாக சிதறி வண்ண மேகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது. சாதாரண வானவில் போல் இல்லாமல் ரெயின்போ மேகங்களின் மீது பல வண்ண பட்டைகள் மின்னுவதுதான் இதன் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையமும் இந்த நிகழ்வு இயற்கையானதுதான் என்றும் இதில் எந்த செயற்கை தொழில்நுட்பமும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது. இதை பகிர்ந்த பலர் இது ஹாலிவுட் காட்சிகள் போல இருக்கிறது என்றும் வானத்தில் இயற்கை ஓவியம் வரைந்த மாதிரி உள்ளது என கருத்துக்களை கூறி வருகின்றனர். இயற்கையின் அற்புதமான காட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படும் என்றும் இந்த ரெயின்போ மேகம் தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
