அடிப்படை வசதிகள் கோரி அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் போதிய பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

ராசிபுரம், மார்ச் 2: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ராசிபுரம்  அடுத்த ஆண்டகளுர்கேட்டில், திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு  வருகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கல்லூரி, தற்போது திறக்கப்பட்டு, மூன்றாம் ஆண்டு  மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை, கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள், திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கல்லூரி திறக்கப்பட்ட போதிலும், கல்லூரிக்கு வந்து செல்ல வழக்கம் போல் பஸ்கள் இயக்காததால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, போதிய பஸ்களை இயக்க வேண்டும். மேலும், கல்லூரியில் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. சீரான குடிநீர் வழங்கி, விடுதியை முறையாக பாராமரிக்க வேண்டும். ஆய்வகத்தில் தேவையான உபகரணங்கள் இல்லை. அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைத்து தரவேண்டும்,’ என்றனர்.தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த கல்லூரி முதல்வர், மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: