பள்ளிபாளையம் காவிரியாற்றில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு டிரைவரை தேடும் பணி தீவிரம்

பள்ளிபாளையம், மார்ச்  2: பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய தொழிலாளியின் சடலத்தை நேற்று மீட்ட தீயணைப்பு வீரர்கள், அவரது  நண்பரை தேடி வருகின்றனர். பள்ளிபாளையம் அடுத்த வேளாத்தாள்  கோயில் நெசவாளர் காலனியை சேர்ந்த தச்சுத்தொழிலாளி வீரமணி(34). இவரது நண்பர்  கார் டிரைவர் பிரகதி(20). இருவரும் நேற்று முன்தினம் மாலை, ஓடப்பள்ளி  காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு  சென்ற இருவரும், நீரில் மூழ்கினர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வெப்படை தீயணைப்பு துறை  வீரர்கள், இருவரையும் தேடினர். நேற்று மாலை வீரமணியின் உடலை தீயணைப்பு  வீரர்கள் மீட்டனர். ஆனால், டிரைவர் பிரகதியை கண்டுபிடிக்க  முடியவில்லை. ஆற்றில் நீரோட்டம் குறைவாக உள்ளதால், அவர் சேற்றில்  சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>