தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வழக்கு இருக்கும் கட்சி 41 தவெக எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள்: ஆய்வில் தகவல்

 

சென்னை: குற்றவியல் வழக்குகள் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் அதிகபட்சமாக தவெகவைச் சேர்ந்த 41 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில், விஜய்யின் தவெக 108 தொகுதிகளையும், திமுக 59 இடங்களுடனும், அதிமுக 47, பாமக 4, காங்கிரஸ் 5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் தலா 2 தொகுதிகளும், தேமுதிக, அமமுக, பாஜ தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேரும் வேட்புமனுத் தாக்கலின்போது தாக்கல் செய்த சுயவிவரப் பிரமாணப் பத்திரங்களை அடிப்படையாக வைத்து குற்றவியல் பின்னணி, நிதி நிலை, கல்வித் தகுதி மற்றும் பாலினம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளன.

இதில், தவெகவின் திருவள்ளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்குமாரின் பிரமாணப் பத்திரம், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்களின்படி, 233 பேரில் 126 (54%) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கொலை, கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக 56 (24%) சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், 6 பேர் தங்கள் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதிலும் தவெக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், பிரதான கட்சிகளில் அதிகபட்சமாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் 107 பேரில் 41 (38%) பேர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக 47 உறுப்பினர்களில் 33 (70%) பேர், பாமக 4 உறுப்பினர்களில் 4 (100%) பேர் மீது என 126 பேர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரில் 3 (60%) பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.
முந்தைய ஆண்டுகளில் 2021 – 134 (60%), 2016 – 75 (34%), 2011 – 70 (30%) குற்ற வழக்குகள் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 233 உறுப்பினர்களில் 193 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.11,265 கோடியாக உள்ளது.

மேலும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 193 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் வைத்துள்ளனர். குறிப்பாக தவெக சட்டமன்ற உறுப்பினர்களில் 77 பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக சொத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் அதிமுகவைச் சேர்ந்த லீமா ரோஸ் (ரூ.5,637 கோடி) முதலிடத்திலும், தவெகவின் ஜோசப் விஜய் (ரூ.648 கோடி) இரண்டாம் இடத்திலும், ஆதவ் அர்ஜுனா (ரூ.534 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: