சென்னை: வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் பெரும்பான்மை இல்லாத விஜய் கட்சியை வளைத்துப்போடும் திட்டத்தை அமித்ஷா தொடங்கியுள்ளார். கூட்டணி அமைச்சரவையிலும் சேர்ந்து குடைச்சல் கொடுக்கவும் முடிவு செய்துள்ளார். அதன் ஒரு கட்டமாக இசட் பிளஸ் பாதுகாப்பையும் வழங்கி மொத்தமாக விஜய்யை கட்டுப்பாட்டுக்குள் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஒன்றிய அரசு, எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து கூட்டணியை உறுதி செய்தது. அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா பலமுறை கூறினார். ஆனால் அதை காதில் வாங்காத எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார். இதனால் கடுப்பான அமித்ஷா, தமிழக பிரசாரத்தை முற்றிலுமாக குறைத்து விட்டார். அமித்ஷா எதிர்பார்த்ததுபோலவே அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தோல்வியை முன்கூட்டியே கணித்த அமித்ஷா, அதிமுக 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெறும், தவெக 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என நினைத்து இரு கட்சிகளையும் சேர்த்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வேலைகளை தேர்தலுக்கு முன்னரே தொடங்கினார்.
இதற்காக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் அபினேஷ் என்பவரை அமித்ஷா, விஜய்யை சந்திக்க அனுப்பி வைத்தார். அவரும் தொடர்ந்து விஜய்யுடன் பேசி வந்தார். தேர்தல் முடிவுகள் அப்படியே உல்டாவாக மாறிவிட்டது. இதனால், ஏற்கனவே போட்ட திட்டப்படி விஜய்யை சந்தித்த அபினேஷ், பாஜவுடன் கூட்டணி குறித்து பேசினார். அப்போது பேசிய விஜய், பாஜவை தேர்தல் நேரத்தில் திட்டிவிட்டேன். இப்போது கூட்டணி சேர்ந்தால் மக்கள் சந்தேகப்படுவார்கள். அதனால் அதிமுகவை கூட்டணிக்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தை அபினேஷ், அமித்ஷாவிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அமித்ஷா, வேலுமணியை தொடர்பு கொண்டு, எப்படியாவது அதிமுகவை, தவெக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தன்னை முதல்வராக அறிவித்தால், கூட்டணிக்கு தயார் என்றார். ஆனால், இந்த திட்டத்தை அமித்ஷா, விஜய் ஆகியோர் மட்டுமல்ல வேலுமணியே மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு அதிமுக எம்எல்ஏக்களை மொத்தமாக வளைத்து தவெக கூட்டணியில் சேருவது என்று முடிவு செய்தனர். இதற்காக எம்எல்ஏக்களை வளைத்தனர். பலருக்கு பெரிய அளவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதற்காக, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபரின் மனைவி லீமா ரோஸ், பெரிய அளவில் உதவிகளை செய்துள்ளார். அதன்படி 30 எம்எல்ஏக்கள் வேலுமணியை ஆதரித்தனர். இந்த ஆதரவு கிடைத்ததும், அபினேஷ் மூலம் அமித்ஷாவை தொடர்பு கொண்ட வேலுமணி கூட்டணிக்கு தயார் என்று அறிவித்தனர். இந்த தகவலை விஜய்க்கும் தெரியப்படுத்தியதோடு, தங்கள் அணிக்கு முக்கியமான துறைகளுடன் 8 முதல் 10 அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால், கூட்டணி அமைச்சரவைக்கு விஜய் சம்மதித்து விட்டார். தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். கூட்டணியில் புதிதாக காங்கிரசிடம் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதேநேரத்தில் திமுக கூட்டணியில் தொடர்ந்து தொடர்வதாக கூறியுள்ள இரு கம்யூனிஸ்ட்களின் 4 எம்எல்ஏக்கள், விசிகவின் 2, ஐயுஎம்எல் 2 என 8 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் 120 என்ற மெஜாரிட்டி கிடைத்தது. ஆனால், 8 எம்எல்ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் திமுக கூட்டணிக்கு சென்று விடுவர். இதனால், அதிமுகவில் இருந்து ஒரு அணி உடைந்து வந்தால், அவர்களை சேர்த்துக் கொண்டால், 137 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும். காங்கிரசின் ஆதரவு கூட தேவைப்படாது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அமித்ஷாவிடம் இருந்து விஜய் கூட்டணியில் சேருவதற்கான உத்தரவு இன்னும் வேலுமணிக்கு வரவில்லை. அந்த உத்தரவு வந்தவுடன் தவெக கூட்டணியில் வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் சேர உள்ளனர். அப்படி சேரும்பட்சத்தில், தவெக கூட்டணி முழுமையாக அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.
அதன்பிறகு, அதிமுக ஆட்சியின்போது ஒன்றிய அரசின் முடிவுகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதுபோல, தவெக அரசையும் ஏற்றுக்கொள்ளச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகத்தான், விஜய்க்கு ஒன்றிய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப்போல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு நாட்டிலேயே 9 பேருக்குத்தான் வழங்கப்படுகிறது. அதில் 10வதாக விஜய் சேருகிறார். இந்த பாதுகாப்பு பெற்றவர்கள், விஜய்யை நினைத்த நேரத்தில் சந்திக்க முடியாது. விஜய் நினைத்தால் மட்டுமே அழைத்து சந்திக்க முடியும். அப்படி சந்திப்பவர்கள் குறித்து முழுமையாக இசட் பிளஸ் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். சந்திப்பவர்கள் குறித்த முழுமையான தகவல்களை கேட்டு பெறுவார்கள். அதன்பின்னர்தான் சந்திக்க அனுமதிப்பார்கள். இதன் மூலம் விஜய்யை ஒன்றிய அரசுக்கு தெரியாமல் யாரும் சந்திக்கவும் முடியாது, அவரும் சென்று யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தங்க கூண்டில் உள்ள கிளிபோலத்தான் விஜய் இருப்பார் என்கின்றனர் ஒன்றிய அரசு அதிகாரிகள். இதனால் தற்போது எல்லா வகையிலும் விஜய், அமித்ஷாவிடம் வசமாக சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கழட்டி விடப்படுவார்கள் என்கின்றனர் பாஜ தலைவர்கள்.
