மதுரை: ஜனநாயக கருத்துகளை ஒடுக்குவதற்கு குற்றவியல் சட்டங்களை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் கடந்த ஜனவரி மாதம் தர்கா தரப்பில் கட்டப்பட்டிருந்த கொடியை அகற்றக்கோரி சிவலிங்கம் உள்ளிட்ட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் கூறி திருப்பரங்குன்றம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சிவலிங்கம் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, வெறும் முழக்கங்களை எழுப்புவது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பொதுத்தொல்லை ஆகாது. பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியாக கூடும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள். அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் சில நேரங்களில் அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும், அவை சட்டமீறல் ஆகாது. ஜனநாயக ரீதியிலான கருத்து வெளிப்பாடுகளை ஒடுக்க குற்றவியல் சட்டங்களை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது. எனவே, மனுதாரர் மீதான வழக்கு ரத்து ெசய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
