சென்னை: முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வாக நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். வழக்கமாக ஜோசப் விஜய் பிரபல நடிகர் என்பதால், அவரை பார்க்க அதிகளவில் ரசிகர்கள் கூட்டம் வருகிறார்கள். அதேநேரம் ஆபத்தை உணராமல் அவரது வாகனம் முன்பும் பின்பும் ரசிகர்கள் மற்றும் தவெகவினர்கள் பலர் பைக் மற்றும் கார்களில் பின் தொடரும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. பல நேரங்களில் பின் தொடரும் நபர்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் காணப்படுகிறது. தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு ஜோசப் விஜய்க்கு தமிழக காவல்துறையின் உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த பாதுகாப்பை மீறி நேற்று முன்தினம் முதல்வர் ஜோசப் விஜய் கான்வாயை பொதுமக்கள் பலர் மீறி உள்ளே வந்தனர். இதை முற்றிலும் தடுக்கும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு அவருக்கு நாட்டின் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக இசட் பிளஸ் பாதுகாப்பு இந்தியாவில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய நபர்களுக்கு தான் ஒன்றிய அரசு வழங்கப்படும் பாதுகாப்பாகாகும். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சி பெற்ற 55 பாதுகாப்பு பணியாளர்கள் இதில் உள்ளனர். இவர்கள் 10க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவார்கள். இந்த பாதுகாப்பில் கமாண்ேடாக்கள் உயரிய ரகமான எம்பி 5 வகை நவீன துப்பாக்கிகள், குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் முன்பும் பின்பும், பைலட் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் முதல்வர் ஜோசப் விஜய் எப்போதும் 3 அடுக்கு பாதுகாப்புடன் காணப்படுவார். இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது வெறும் தனிப்படை பாதுகாப்பு அல்ல, மிக நெருங்கிய கண்காணிப்பு மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கும் அமைப்பாகும்.
இந்த அமைப்பை தாண்டி முதல்வரை யாரும் எளிதில் சென்று பார்க்கவோ அல்லது காண்வாயில் நுழையவோ முடியாது. நாட்டின் உயரிய பாதுகாப்பான, எஸ்பிஜி பாதுகாப்பு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்த பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பாதுகாப்பாக கருதப்படுகிறது. இந்த பாதுகாப்பை தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்களாக இருந்த கலைஞர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக தற்போது முதல்வர் ஜோசப் விஜய்க்கு வழங்கப்படுவது குறிப்படித்தக்கது. இந்த பாதுகாப்பு ஒன்றிய உளவுத்துறையின் அறிக்கையின் படி ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழக முதல்வருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
