ஈக்காட்டுதாங்கல் பகுதியில் எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் சென்டரில் தீ விபத்து

 

ஆலந்தூர், மே 12: ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள தனியார் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 175 பைக்குகள் எரிந்து நாசமானது.
ஈக்காட்டுதாங்கல் தனக்கோட்டி ராஜா தெருவில், எலெக்ட்ரிக் பைக் சர்வீஸ் சென்டர் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கிண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால், அதற்குள் சர்வீஸ் சென்டரில் இருந்த 175 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகின. இந்த தீ விபத்து குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருந்தபோதும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: