செங்கல்பட்டு, மே 23: வீரதீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லா நினைவாக, தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை சுதந்திர விழாவின் போது தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் விருதுகளுக்கான https://www.awards.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்படி இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மருதம் பாண்ட் (Marutham Font) மற்றும் ஆங்கில வர்தனா பாண்ட் (Verdana Font) மொழிகளில் தனித்தனியாக 3 செட் புக்லெட் (Booklet) தயார் செய்து 22.6.2026 அன்று மாலை 5 மணிக்குள் \”மாவட்ட சமூக நல அலுவலகம், B-H பிளாக், 4வது தளம், மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு – 603 111\” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கலெக்டர் கூறியுள்ளார்.
