மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மாமல்லபுரம் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் அதிகரிக்க செயற்கை பவள பாறைகள் அமைப்பு: அதிகளவு மீன் கிடைக்குமென மீனவர்கள் நம்பிக்கை

 

மாமல்லபுரம், மே 20: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், மாமல்லபுரம் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க தென்னை ஓலை மூலம் வீடு கட்டி செயற்கை பவள பாறைகளை கடலில் இறக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாகும். இந்த இடைபட்ட காலத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளம் குறைந்துவிடும். இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 15ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்தல் மற்றும் வலைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை மீனவ குப்பங்களில் 2,500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி மீனவர்கள் நாள்தோறும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, மீன்பிடி தடைக்காலம் என்பதால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவர் பகுதியில் கடலில் மீன் இனப்பெருக்கம் குறைந்து காணப்படுதாகவும், மீனவர்களின் வலைகளில் குறைந்தளவு மீன்களே சிக்குவதாகவும், சில நேரங்களில் வெறுங்கையோடு திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், மீன்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் மாமல்லபுரம் மீனவர்கள் தென்னை ஓலைகள் மற்றும் குச்சிகளை கொண்டு வீடு போல் கட்டி, கடலில் குறிப்பிட்ட தூரம் படகில் எடுத்துச் சென்று அதனை கடலில் இறக்கி செயற்கை பவள பாறைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், மாமல்லபுரம் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் மீன்களே கிடைக்காமல் திரும்பி வருகிறோம். கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்போம்.

தற்போது மீன்பிடிக்க தடைக்காலம் என்பதால், மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க தென்னை ஓலைகள் மற்றும் குச்சிகளை கொண்டு வீடு கட்டி கடலில் இறக்கி செயற்கை பவள பாறைகளை உருவாக்கி வருகிறோம். இதனால், மீன்கள் அந்த தென்னை ஓலை வீட்டிற்குள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து, இனப்பெருக்கம் அதிகரிக்கும். தடைக்காலம், முடிந்து கடலுக்கு செல்லும்போது எதிர்பார்த்ததை விட அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்றனர்.

Related Stories: