அசாம் பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி முதல்வராக ஹிமந்தா நாளை மீண்டும் பதவியேற்பு

 

கவுகாத்தி: அசாம் பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதையடுத்து ஆட்சி அமைக்க வரும்படி ஹிமந்தா சர்மாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து நாளை காலை அவர் முதல்வராக பதவியேற்கிறார். அசாம் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக பாஜ ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜ கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தேஜ கூட்டணி கட்சிகளின் குழு தலைவராகவும் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா, அரியானா முதல்வர் நயாப்சிங் சைனி ஆகியோர் நேற்று காலை மாநில ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை ஆளுநர் மாளிகையில் சந்தித்து முதல்வர் ஹிமந்தா தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோரினர். இதையடுத்து நேற்று மாலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், புதிய அரசு அமைப்பதற்கு முதல்வர் ஹிமந்தாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவித்துள்ளது. ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து நாளை காலை, கவுகாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடக்கும் விழாவில் ஹிமந்தா முதல்வராக பதவியேற்பார். பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். ஹிமந்தா தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: