வீட்டில் மாம்பழம் பறிக்கச் சென்ற 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவர் கைது: ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

ஜோர்ஹாட்: அசாம் மாநிலத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரண்டு சிறுமிகள் 65 வயது முதியவர் ஒருவரின் வீட்டிற்கு மாம்பழம் பறிக்கச் சென்றனர். அப்போது அந்த முதியவர் அவர்கள் இருவரையும் பிடித்து கைகளைக் கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆரம்பத்தில் இந்த கொடுமை குறித்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் மனவேதனையில் இருந்த ஒரு சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்றொரு சிறுமி நடந்த விஷயங்களைக் குடும்பத்தினரிடம் கூறி முதியவரை அடையாளம் காட்டினார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தியோக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அந்த முதியவர் (65) மீது போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக ஜோர்ஹாட் எஸ்.எஸ்.பி சுப்ரஜோதி போரா கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு மருத்துவப் பரிசோதனை முடிந்தது. தற்கொலை செய்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியும்’ என்று தெரிவித்தார். இதற்கிடையில் முதியவருக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதியவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: