சென்னை: தமிழக பாஜ செய்தி தொடர்பாளராக ஏ.என்.எஸ்.பிரசாத் இருந்து வந்தார். இவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ சட்டசபை தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. எனவே விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும், தலைவர்களும் பெருந்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விஜய்க்கு தேஜ கூட்டணி முழு ஆதரவு அளிக்க முயற்சி செய்ய வேண்டும்” என்றும் கூறியிருந்தார். கட்சியின் மேலிட அனுமதி இன்றி, தன்னிச்சையாக இத்தகைய கருத்தை வெளியிட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி, தமிழக பாஜவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்தார். இந்த நிலையில் பிரசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நேற்று நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஏ.என்.எஸ்.பிரசாத், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.
* மாநில தலைமை குறித்து அவதூறு பாஜவை சேர்ந்த 8 பேர் நீக்கம்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேர்தல் முடிவுக்கு பிறகு மாநில தலைமை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பிய பவானி எஸ்.எம்.எட்வின் ஜோஸ்(மாவட்டத் துணைத் தலைவர், கன்னியாகுமரி மேற்கு), ஏ.ஆர்.அருண்(மாநில செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி, கன்னியாகுமரி கிழக்கு), கன்னியாகுமரி மேற்கு மாவட்ட உறுப்பினர்கள் ஆர்.ராஜ் குமார், சி.சிவின் குமார், பாலமுருகன், எஸ்.சனல் குமார், டி.சுரேஷ் குமார், செல்வா அருண் ஆகியோர் நீக்கப்படுகிறார்கள்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் மேற்கு மண்டல் தலைவர் பி.வருண் காந்தி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், அவர் வகித்து வந்த மண்டல் தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். இதே போல, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தினை சார்ந்த வழக்கறிஞர் பிரிவு, மாநில செயலாளர் எம்.சசிக்குமார், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். இவ்வாறு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
