திருமலை: திருப்பதி கலப்பட நெய் பிரச்னையில் ஒருநபர் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க உயர்நிலைக்குழு அமைத்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் கொள்முதல் செய்த கலப்பட நெய் வழக்கில் ஆந்திர மாநில அரசு நியமனம் செய்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ்குமார் தலைமையிலான ஒருநபர் ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில் முன்னாள் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் சுப்பாரெட்டி, கருணாகர்ரெட்டி மற்றும் தேவஸ்தான நிதி அதிகாரி பாலாஜி உள்ளிட்டோர் வேண்டுமென்றே கலப்பட நெய் என தெரிந்தும் கொள்முதல் செய்ததாகவும், இதற்கு மூலக்காரணம் கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி தான் எனவும் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த அறிக்கை மீது குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இதில் அரசின் தலைமை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வுசெய்து, அதில் உள்ள சிக்கல்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் இக்குழுவின் தலைவராக அரசின் தலைமைச்செயலாளரையும், உறுப்பினராக டிஜிபியையும், உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராக சட்டச்செயலாளரையும் நியமித்து அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒருநபர் குழுவின் அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளில் செயல்படுத்தக்கூடிய சிக்கல்களை இந்த 3 பேர் கொண்ட குழு ஆராயும். . இந்த குழு ஒரு வாரத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவுக்கு அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
