திருவனந்தபுரம்: முதல்வர் பதவிக்கு 3 முக்கிய தலைவர்கள் மல்லுக்கட்டுவதால் கேரளத்தில் தேர்தல் முடிவு வந்து 4 நாட்கள் ஆகியும் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாத நிலை நிலவுகிறது. கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து 4 நாட்கள் ஆன பிறகும் இப்போது வரை புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சதீசன், அதற்கு முந்தைய பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா, ஆலப்புழா தொகுதி எம்பியான கே.சி. வேணுகோபால் ஆகிய 3 பேரும் தான் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர்களான அஜய் மாக்கன், முகுல் வாஸ்னிக் ஆகியோரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தது. இவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களுடனும், முக்கிய தலைவர்களுடனும் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். எம்எல்ஏக்களை ஒன்றாகவும், தனித்தனியாகவும் சந்தித்துப் பேசினர். அப்போது யாருக்கு தங்களுடைய ஆதரவு என்று மேலிடக் குழுவிடம் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
இதன் பிறகு முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கே.சி. வேணுகோபால், சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலாவிடமும் மேலிடக் குழு ஆலோசனை நடத்தியது. இவர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் மாநிலத் தலைவர் சன்னி ஜோசப்பையும் மேலிடக் குழு சந்தித்து பேசியது. தேர்தல் முடிவு வந்து 4 நாட்கள் ஆகியும் இதுவரை முதல்வரை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு காங்கிரசில் கடும் குழப்பம் நிலவி வருகிறது.
9 அமைச்சர்களை தோற்கடித்த இளைஞர்கள்
கேரளத்தில் வழக்கமாக காங்கிரசில் மூத்த தலைவர்களுக்குத் தான் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை பெரும்பாலும் மூத்த தலைவர்களை ஒதுக்கி வைத்து இளைஞர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இடதுசாரி கூட்டணி சார்பில் இம்முறை போட்டியிட்ட 13 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர்.
இவர்களில் 9 பேரையும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த இளைஞர்கள் தான் தோற்கடித்தனர். கோழிக்கோடு மாவட்டம் பேராம்பிரா தொகுதியில் இடதுசாரி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.பி. ராமகிருஷ்ணன் படுதோல்வி அடைந்தார். நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரை முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இளம்பெண் பாத்திமா தெஹ்லியா தான் தோற்கடித்தார். முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட இவர் தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சட்டசபைக்கு செல்லும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேர்தல் தோல்வி எதிர்பாராதது; தவறுகளை திருத்தி முன்னேறுவோம்: பினராயி விஜயன் அறிக்கை
தேர்தல் முடிவு வந்து 4 நாட்கள் கழிித்து தோல்வி குறித்து பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கை: மக்கள் வழங்கிய தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். தேர்தல் முடிவு சற்றும் எதிர்பாராததாகும். தொடர்ந்து மூன்றாவது முறையாக எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை இழந்திருந்தாலும் ஒரு பெரும் பகுதியினர் இடது ஜனநாயக முன்னணியுடன் உறுதியாக நின்றது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணியை பொறுத்தவரை இது ஒரு முடிவு அல்ல. மாறாக தொடர்ச்சியான ஒரு அரசியல் பணிகளுக்கான ஒரு தொடக்கமாகும். மக்களின் நம்பிக்கையை சிறந்த முறையில் மீண்டும் பெறுவதற்கும், மேலும் தவறுகளை திருத்தி வலுவாக முன்னேறுவதற்கும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். சட்டசபையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எந்த ஒரு திட்டத்திற்கும் நாங்கள் ஆதரவளிப்போம். அதே வேளையில் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு நாங்கள் எந்தக் காரணம் கொண்டும் துணை போக மாட்டோம்.
