தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு: முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்

 

சென்னை: தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களில் ெவற்றி பெற்ற காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இது கூட்டணிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 108 இடங்களை கைப்பற்றிய தவெகவுக்கு, காங்கிரசின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது. அதன்படி பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 இடங்கள் தேவை என்பதால் விசிக, இடதுசாரிகளிடம் விஜய் ஆதரவு கோரியிருந்தார். இந்த சூழ்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ெப.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். விஜய் ஆதரவு கேட்டது குறித்து மு.க.ஸ்டாலினுடன் 3 தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அவரது கோரிக்கையை ஆளுநர் ஏற்காதது குறித்தும் சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும், தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டியில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தேர்தல் முடிவுகள், சிறுபான்மையினரின் வாக்குகள் குறித்துப் பேசினோம். தனிப்பட்ட முறையில் எதுவும் பேசவில்லை. தவெக ஆதரவு கேட்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். ஆலோசனைக் கூட்டம் எப்போது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை காலை நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கின்றன. நாங்களும் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும். தமிழகத்தில் பாஜ குழப்பத்தை ஏற்படுத்துகிறது. விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவளித்ததால் பாஜ ஆளுநர் மூலமாக நெருக்கடி கொடுக்கிறது” என்றார்.

முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்ைம செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திமுக சட்டப்பேரவை கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Stories: