சென்னை: தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே திமுகவின் முதன்மை நோக்கம். அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவது என்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்திற்கு கூட்டத்தில் வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை எம்எல்ஏக்களுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும்- இந்த வெற்றிக்காக தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திமுக கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுக தொடங்கிய காலம் முதல் மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதனை மக்களும் உணர்ந்து நன்றி உணர்வோடு வாக்களித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.
அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு, மு.க.ஸ்டாலினால் வழிநடத்தப்படும் திமுக என்றும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும் என்று ஒருமனதாக உறுதியேற்கிறோம். * 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை தொடங்கியது முதல் ஆறாவது முறையாக திமுகவை ஆட்சியில் அமர்த்திக் காட்டியது வரை, இந்த அரை நூற்றாண்டு காலமாக தனது உண்மையான உழைப்பால் திமுகவையும், தாய்த் தமிழ்நாட்டையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கடந்த ஐந்தாண்டு காலம் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டிய ஆளுமைத் திறன் கொண்டவர் தலைவர். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த்தினார். சமூக வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணிக்கு வந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து பார்த்தது. ஐந்தாண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள்; அத்தனை திட்டங்களும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியது அவரது உண்மையான உள்ளத்துக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
கோட்டையில் இருந்து மட்டுமல்ல, மக்களோடு மக்களாக இருந்து ஆட்சியை நடத்தினார். தங்களில் ஒருவராகவே தமிழ்நாட்டு மக்கள் அவரைப் போற்றினார்கள். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். அவர் முகத்தைக் கண்டதும், மக்கள் முகங்கள் மலர்ந்தன. இதன் மூலமாக திமுகவிற்கு மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையும் உருவாக்கித் தந்தார் தலைவர். இன்னும் நூறாண்டு காலத்துக்கு யாராலும் அசைக்க முடியாத பேரியக்கம் என்பதற்கான அடித்தளத்தை உறுதி செய்தார் தலைவர். சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்பு மலையளவு ஆகும். தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார் தலைவர். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் மக்களோடு கலந்துரையாடினார். லட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் தலைவரின் சாதனை ஆகும். இத்தகைய பெருமைமிகு தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. ‘‘இப்படி ஒருவரை தலைவராகப் பெற என்ன தவம் செய்தோம்?” என்று பெருமைப்படும் வகையிலான நம் தலைவர் தொடர்ந்து செயல்பட்டு நம்மை வழிநடத்த வேண்டும் என்று கோடிக்கணக்கான திமுக உடன்பிறப்புகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றது. திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது.
அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் திமுக தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. பாஜ பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
