திருவாரூர், மே 7: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக உள்ள தியாகராஜ சுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் உள்ளது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.
கோயில் 5 வேலி, குளம் 5 வேலி,ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் இருந்து வரும் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் பங்குனி உத்திர விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 6ந் தேதி நடைபெற்றது. மேலும் தெப்ப திருவிழா நாள் ஒன்றுக்கு இரவு 3 சுற்றுகள் வீதம் இரவு 7 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரையில் கண்ணை ஜொலிக்கும் மின்னொளியில் நடைபெறுவது வழக்கம்.
மேலும் இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு தெப்பம் உருவாக்கப்படும் நிலையில் இதற்காக 432 டின் பேரல்களில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் வீதம் 2 அடுக்குகளாக 7 அடி உயரத்திலும் 2 ஆயிரத்து 500 சதுர அடி அகலத்திலும் சுமார் 400 பேர் அமர்ந்து செல்லும் வகையில் தெப்பம் உருவாக்கப்பட்டு இந்த தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் இந்த தெப்ப திருவிழாவானது நாளை (8ந் தேதி) முதல் துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் தற்போது தெப்பம் கட்டுமான பணி என்பது இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.
