நாமக்கல், மே 7: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 180 பள்ளிகளில் படித்து வரும் 77 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு, நடப்பு ஆண்டு இலவச பாடபுத்தகம் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான புத்தகங்கள் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் இலவச பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 180 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிகளுக்கு 2026-27ம் கல்வியாண்டில் சுமார் 77 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான பாட புத்தகங்கள், கடந்த ஜனவரி மாதம் முதல், தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை, சிவகாசி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள அச்சகங்களில் இருந்து பாடபுத்தகங்கள் தயார் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் அனைத்து வகுப்பினருக்கும் தேவையான பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வரப்பெற்றுள்ளது. அனைத்து வகையான பாடபுத்தகங்களும், நாமக்கல் கொண்டுவரப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள புத்தக குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் வாரியாகவும், பாடங்கள் வாரியாகவும் தனித்தனி அறைகளில் பாடபுத்தகம் மற்றும் நோட்டுகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்துறை இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த பாடபுத்தகங்கள் பள்ளிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் நேரடி பொறுப்பில் இவை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அரசின் இலவச பாடபுத்தகங்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
