மாசி மகத்தையொட்டி குடந்தையில் 3 கோயில் தேரோட்டம்

கும்பகோணம், பிப்.26: மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் காசிவிசுவநாதசுவாமி கோயில், அபிமுகேஸ்வரசுவாமி, கவுதமேஸ்வரர் ஆகிய மூன்று கோயில்களின் தேரோட்டம் நேற்று மாலை மகாமக குளக்கரையில் நடைபெற்றது.

கும்பகோணம் சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் மாசி மகத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன்கோயில்களில் மாசிமக பெருவிழா பிப்.17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோன்று கடந்த பிப்.18ம் தேதி வைணவத் தலங்களான சக்கரபாணிசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் ஆகிய கோயில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்நிலையில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை சண்டிகேஸ்வரர் சுவாமி தேர் கோயிலின் தேரோடும் வீதிகளில் நடைபெற்றது. முன்னதாக காசிவிசுவநாதசுவாமி கோயில், அபிமுகேஸ்வரசுவாமி கோயில், கவுதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று சிவன் கோயில்களின் உற்சவ சுவாமி - அம்பாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நேற்று மாலை மகாமக குளக்கரையிலும் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் தேடம் வடம்பிடித்து இழுத்தனர். அதேபோல் வியாழசோமேஸ்வரர்கோயில் தேரோட்டம், அக்கோயிலை சுற்றியும் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: