புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி, விராலிமலை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை ஆகிய சட்டன்ற தொகுதிகள் உள்ளன. இதில் புதுக்கோட்டையில் திமுக வேட்பாளர் முத்துராஜா, திருமயத்தில் திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி, ஆலங்குடியில் திமுக வேட்பாளர் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர். விராலிமலையில் அதிமுகவும், கந்தர்வகோட்டை, அறந்தாங்கியில் தவெகவும் வெற்றி பெற்றது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா 66,825 வாக்குகள் பெற்று 1867 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுக்கோட்டை தொகுதியில் ஒருவர் ஒரு முறை தான் வெல்லமுடியும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வந்த வரலாற்றை 2வது முறை வெற்றி பெற்று முத்துராஜா முறியடித்துள்ளார். 1971க்கு பிறகு 1977ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜகுமார் விஜயரகுநாத தொண்டைமான் 1980 தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன்பிறகு திமுகவின் பெரியண்ணன் 1989, 1996 தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்த ெதாகுதியில் ஒரு முறை வெற்றி பெற்ற யாரும் மீண்டும் வெற்றி பெறவில்லை.
அதன்படி 1997 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மாரியய்யா, 2006ல் வெற்றி பெற்ற நெடுஞ்செழியன்(அதிமுக) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2011ல் வெற்றி பெற்ற முத்துக்குமரன்(இந்திய கம்யூ.) ஓராண்டிலேயே விபத்தில் இறந்தார். இதற்காக நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கார்த்திக் தொண்டைமான்(அதிமுக) அதற்கு அடுத்து 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. 2001, 2011ல் வெற்றி பெறாத பெரியண்ணன் அரசு(திமுக) 2016ல் வெற்றி பெற்றார்.
1996க்கு பிறகு ஒரு முறை வெற்றி பெற்றவர்கள் மீண்டும் வெற்றி பெறுவது குறைந்ததுடன், வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த வரலாறு மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் இல்லை. இந்நிலையில் இதை முறியடிக்கும் வகையில் திமுக வேட்பாளர் முத்துராஜா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
