மலேசியாவில் மாயமான கிருஷ்ணகிரி எலக்ட்ரீசியன்

கிருஷ்ணகிரி, பிப்.26: மலேசியாவில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ணகிரி எஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி(30). இவர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் ஞானவேல்(37), எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த மணி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாஜலம் ஆகியோர் மூலம், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஜெகுபாரூர் என்னுமிடத்திற்கு, டவர் வேலைக்காக சென்றார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வந்தார். 5 பேர் ஒரு அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி, எனது கணவருடன் பணிபுரிந்து வந்த இந்து என்பவர், எங்களுக்கு போன் மூலம், கோலாலம்பூரில் இருந்து எனது கணவரை காணவில்லை என்று தகவல் தெரிவித்தார். எனவே, எனது கணவர் எங்குள்ளார்? உயிருடன் இருக்கிறாரா? என்பது குறித்து விசாரித்து, அவரை எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>