சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில், சில அரசியல் கட்சிகள் மூலம் திட்டமிட்ட குழப்பங்கள் ஏற்படுத்தப்படலாம் என்ற நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, பாஜ மற்றும் அதனுடன் இணைந்துள்ள பிற அரசியல் அமைப்புகள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
இதன் தாக்கம் எண்ணிக்கை மையங்களை தாண்டி, அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறைக்கு இடையூறு ஏற்படும் என்ற கவலை அதிகரித்துள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் அமைதியும் பொது ஒழுங்கும் நிலைநிறுத்தப்படுவதற்காக, பாதுகாப்பு படையினரை போதுமான அளவில் பணியில் அமர்த்தவும், காவல்துறையுடன் உரிய ஒத்துழைப்பை ஏற்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
