மரக்காணம்: கோடை காலம் துவங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி வெப்பம் அதிகரித்திருப்பதால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விழுபபுரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. இதனால் உப்பு தொழிலே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. இந்த உப்பு தொழிலை நம்பி இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இப்பகுதியில் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் மரக்காணம் பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்த கோடை வெயிலால் இப்பகுதியில் உப்பு உற்பத்தியும் அமோகமாக உள்ளது. மேலும் நாளை முதல் கத்திரி வெயில் துவங்க உள்ளது. இந்த கத்திரி வெயில் துவங்கினால் மேலும் உப்பு உற்பத்தி அதிகரிக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
