தமிழ்நாட்டில் நாளை வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் உடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்குகள் எண்ணப்படும் நிலையில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்கள் உடன் காணொலி வாயிலாக டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்பது நாளை மதியம் தெரிந்து விடும். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன.

மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். இந்த தேர்தலில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்துள்ளனர். இது 85.10 சதவீதம் ஆகும். இதையடுத்து தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு 62 மையங்களில் எண்ணப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை வாக்குகள் எண்ணப்படும் நிலையில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்கள் உடன் காணொலி வாயிலாக டெல்லியில் இருந்து இந்திய தேர்தெல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடக்கிறது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: