மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி செடிகளை பாதிக்கும் புசேரியம் எனப்படும் வாடல் நோய்: கட்டுப்படுத்த தோட்டக்கலை துணை இயக்குநர் ஆலோசனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி மற்றும் முலாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம், திருத்தணி ஆகிய வட்டாரங்களில் அதிக அளவு தர்பூசனை சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் தற்பொழுது தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது ஒரு சில இடங்களில் புசேரியம் எனப்படும் வாடல் நோய் தென்படுகிறது. இதனால் விளைச்சல் இழப்பு ஏற்படும் பாதிப்பும் உள்ளது. புசேரியம் வாடல் நோயால் பாதிப்படைந்த செடிகள் ஆரம்பத்தில் முதிர்ந்த இலைகள் பழுப்பு நிறமாக மாறும் பின்னர் அந்த கொடி முழுவதும் வாடும் அபாயம் ஏற்படும். பகுதி அளவு பாதிக்கப்பட்ட செடிகளுக்கு, நீர் சத்துக்கள் செடிகளுக்கு செல்வது தடைபட்டு சத்துக்கள் கிடைக்காமலும் செடிகள் வளர்ச்சி குன்றி காய்கள் வளர்ச்சியடையாமல் சுருங்கிவிடும்.

இதனை கட்டுப்படுத்த ஆரம்பம் முதலே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வரவேண்டும். செடிகள் நடவு செய்யும் போது தொழு எருவுடன் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் ஆகிய உயிரியல் பூஞ்சான கொல்லிகளை 2 கிலோ ஏக்கருக்கு கலந்து மண்ணில் இடுதல் வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மேற்கண்ட பூஞ்சான கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வீதம் கலந்து வேர்கள் நனையும்படி ஊற்றுதல் வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரங்களில் செடிகளுக்கு தெளித்தும் விடவேண்டும்.

ரசாயன முறையில் இதனை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விட வேண்டும். மேலும், வேர்கள் நனையும் படியும் ஊற்றியும் விட வேண்டும். ஒருமுறை தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி சாகுபடி செய்த வயல்களில் மீண்டும் அடுத்த முறை சாகுபடி செய்வதை தவிர்த்து மாற்று பயிற்களை சாகுபடி செய்து பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும். நுண்ணூட்ட சத்துக்களான போரான் மற்றும் கால்சியம் சத்துகள் அதிகளவு தேவை என்பதால் அந்த சத்துகளை ஆரம்பம் முதலே கொடுக்க வேண்டும்.மேலும், தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளை பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: