வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி; விறகுகளின் விலையும் விர்ர்ர்…

திருப்பூர்: வர்த்தக சிலிண்டர்கள் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் விறகுகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. ஈரான்-அமெரிக்க போர் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வர்த்தக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.993 என நேற்று முன்தினம் ஒன்றிய அரசு உயர்த்தியது. இதனால் அதன் விலை 3,237 ரூபாயாக உயர்ந்தது.

இந்த திடீர் விலை உயர்வு ஓட்டல்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக விறகு அடுப்புகளுக்கு மாற முயற்சிக்கும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது சிலிண்டர் விலை உயர்வு காரணமாக விறகுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் விறகுகளின் விலையும் இரு மடங்காக உயர்த்துள்ளது.

திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 100 கிலோ 700 ரூபாய் வரை விற்கப்பட்ட விறகுகள் தற்போது 1500 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.‌ சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல்வேறு ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை விறகு அடுப்புகளுக்கு மாறி வரக்கூடிய நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் விறகு விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ள நிலையில் எரிபொருள் செலவும் இரு மடங்காகி உள்ளதால் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது ஓட்டல் உரிமையாளர்களை மட்டுமல்லாது ஓட்டல் உணவுகளை நம்பி திருப்பூரில் தங்கி பணிபுரியும் வெளி மாவட்டம் மற்றும் பிற மாநில தொழிலாளர்களையும் பாதிப்படைய செய்துள்ளது.

Related Stories: