3 மாதங்களுக்கு ஒருமுறை தொழில்துறையினருக்கு குறைகேட்கும் கூட்டம்

திருப்பூர், பிப்.26:  தடைகளை கடந்து தொழில் துறை வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதற்கு 3 மாதத்துக்கு ஒருமுறை பின்னலாடை துறைக்கான குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூரில் ஆண்டுக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகமும், 5,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக உள்நாட்டு வர்த்தகமும் நடக்கிறது. பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்கள் மூலமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

மின்வெட்டு, சாயத்தொழில் பிரச்னை, பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றம், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, பனியன் உபகரணங்கள் விலையேற்றம், பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு, கூடுதல் வரி விதிப்புகள், உள்கட்டமைப்பு என பனியன் தொழிலுக்கு பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் மட்டுமே பனியன் தொழிலை பாதுகாக்க முடியும்.

வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு முன், பிரச்னைகள் தென்பட்டதும் தொழில் துறையினர் கலந்து பேசி தீர்வு கண்டனர். மக்கள் பிரதிநிதிகளும் தேவையான உதவிகளை செய்தனர்.

தற்போது பிரச்னைகள் அடுக்கடுக்காக படையெடுத்து வருவதால், பனியன் தொழிலை பாதுகாக்க கூட்டுக்கமிட்டி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இது குறித்து, தொழில்துறையினர் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், திருப்பூர் பின்னலாடை துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பின்னலாடை துறை பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. தொழில்முனைவோர் பிரச்னைகள், தொழில் பிரச்னைகளை கண்டறிந்து சரி செய்வது மிகவும் அவசியமாகிறது.

கலெக்டர் தலைமையில் பொதுமக்கள், விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல் 3 மாதத்துக்கு ஒருமுறை, பின்னலாடை துறையினரை அழைத்து, குறை கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். தொழில்துறையினரின் பிரச்னைகள், கருத்துக்கள், தேவைகளை கேட்டறிவதன் மூலம், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று எளிதாக தீர்வு காண முடியும். குறைகேட்பு கூட்டம் நடத்துவதன் மூலம், பின்னலாடை உற்பத்தி தொழில் மேம்படுவதற்கு உகந்த சலுகைகளை, பட்ஜெட்டில் அறிவிக்க முடியும். ஆகவே, தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பின்னலாடை துறையினருக்கான குறைகேட்பு கூட்டம் நடத்த, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றனர்.

Related Stories:

>