சென்னை: தமிழ்நாடு- புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காகவும், வாக்கு வங்கி நலனுக்காகவும் குழந்தைகளைக் குறிவைத்து பயன்படுத்தியிருப்பது அனைவரையும் கவலைப்பட வைத்திருக்கிறது.
தீவிரமான கதாநாயகப் பற்றுக் கொண்டவர்களின் அதீத ஆசைகள் நிறைவேறாத சூழல் ஏற்பட்டால் பெரிய ஏமாற்றத்திற்கு அவர்கள் ஆளாகக்கூடும். குழந்தைகள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைய நேரிடும். இது அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் தவறான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இது ஏதோ அதீத கற்பனை என நாம் ஒதுக்கி தள்ளிவிட முடியாது. ஊடகக் காணொலிகள் ஊகத்தின் அடிப்படையில் மக்களிடம் பரப்பப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் எதிர்மாறாக அமைந்தால் ஏமாற்றம் அடைந்தவர்கள் தன்னை துன்புறுத்திக் கொள்வது அல்லது வன்முறை மூலமாக மற்றவர்களை துன்புறுத்துவது போன்ற ஆபத்தான நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அனைத்து தொலைக்காட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, உளவியல் ஆலோசனை எண் 14416, கல்வி உதவி எண் 14417 ஆகியவை நகரும் வரி வடிவில் பகிரப்பட வேண்டும்.
குழந்தைகள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க தூண்டுவதையும், வாக்கு வங்கி கருவியாக மாற்றுவதையும் தடை செய்வதோடு குழந்தைகளுக்கு பொதுவான அரசியல் விழிப்புணர்வை வளரச் செய்யும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
