ஆனைமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே காளியாபுரம் மாட்டேன் கவுண்டன்புதூரில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், ஆழியாரை சேர்ந்த சந்திரன் (45) மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி (39) ஆகிய இருவரும் விவசாய கூலி வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில், ஆழியாரை சேர்ந்த தொழிலாளி கருப்புசாமி (40) என்பவருடன் சந்திரனுக்கு, சில மாதத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது கருப்புசாமி, தோட்ட வேலை ஏதேனும் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது சந்திரன், மனைவி காளீஸ்வரியின் செல்போன் எண்ணை கொடுத்து, அந்த எண்ணுக்கு பேசுதாறும், வேலை இருந்தால் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, காளீஸ்வரியின் எண்ணை தொடர்பு கொண்டு கருப்பசாமி பேசியுள்ளார். அப்போது தகாத முறையிலும் தவறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த சந்திரன், கடந்த மாதம் 28ம் தேதி கருப்புசாமியை தொடர்புகொண்டு, தான் வேலை பார்க்கும் தோட்டத்துக்கு வருமாறும், ஒன்றாக மது குடிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
ஆசையோடு அங்கு வந்தவரிடம் தனது மனைவியிடம் தவறாக பேசியது குறித்து சந்திரன் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இரு கட்டத்தில் சந்திரன், மண் வெட்டியால் கருப்புசாமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், சந்திரனும் காளீஸ்வரியும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து, தோட்டத்திலேயே குழிதோண்டி உடலை புதைத்து விட்டு, எதுவும் தெரியாதது போல இருந்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு கருப்புசாமியின் உடலை புதைத்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலறிந்த ஆனைமலை போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கிருந்த மேடான பகுதியை தோண்டி எடுத்தபோது, கருப்புசாமியின் உடல் புதைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடலை மீட்டு அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிந்து, சந்திரன் மற்றும் அவரது மனைவி காளீஸ்வரியை கைது செய்தனர்.
